சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

12.020   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

-
வேதியர் தில்லை மூதூர்
வேட்கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி
மன்னுசிற் றம்ப லத்தே
ஆதியும் முடிவும் இல்லா
அற்புதத் தனிக்கூத் தாடும்
நாதனார் கழல்கள் வாழ்த்தி
வழிபடும் நலத்தின் மிக்கார்.

[ 1]


தில்லை மூவாயிரவராய மறையவர்கள் வாழும் பழமையான தில்லையின்கண், குயவர் குலத்தில் தோன்றியவர். தம் இட மருங்கில் இருந்தருளும் உமையம்மையாரை நோக்கியவாறு, நிலை பெற்ற சிற்றம்பலத்தின்கண், முதலும் முடிவும் இன்றி, வியக்கத் தக்க தும் ஒப்பற்றதும் ஆய திருக்கூத்தினை ஆடுகின்றப் பெருமானின் திருவடிகளை வாழ்த்தி வழிபட்டு வரும் பத்திமையில் சிறந்தவர்.

குறிப்புரை: இத்திருப்பாடலிலிருந்து மூன்றாவது பாடல் வரை மேதக்க பண்பு நலன்களைக் கூறி, இத்தகைய பண்புடையார் திருநீல கண்டர் என்பார் என அவர் பெயரை நான்காவது பாடலில் அறிவுறுத் துகின்றார் சேக்கிழார். தில்லையின் பழமை 'தில்லை மூதூர் ஆடிய திரு வடி' (தி. 8 ப. 2 வரி, 1) என்பதனாலும் அறியலாம். வேள் - மண்: இத னைக் கொண்டு தம் தொழில் செய்தலின் வேட்கோவர் எனப்பட்டார்.

பொய்கடிந் தறத்தின் வாழ்வார்
புனற்சடை முடியார்க் கன்பர்
மெய்யடி யார்கட் கான
பணிசெயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றுஞ் செய்கை
மனையறம் புரிந்து வாழ்வார்
சைவமெய்த் திருவின் சார்வே
பொருளெனச் சாரு நீரார்.

[ 2]


நிலையில்லாத உலகியற் பொருள்களில் பற்று வையாது, நிலையுடைய மெய்ப்பொருளிலேயே பற்று வைத்து வாழ் பவர். கங்கை அமைந்த திருச்சடையை உடைய சிவபெருமானிடத்து அன்புடையவர். உண்மையான அடியவர்களுக்கு உரிய தொண்டு களைச் செய்து வரும் விருப்புடையவர். உலகினரால் போற்றப்பெறும் செயற் பாடுகளையுடைய இல்லறத்தை ஏற்று ஒழுகுபவர். சைவத்தின் உண்மைப் பொருளாக விளங்குகின்ற சிவபரம்பொருளைச் சார்ந்து வாழ்வதே வாழ்வெனக் கருதும் தன்மையர்.

குறிப்புரை: பொய் - நிலையில்லாத பொருள்கள். இவற்றை நிலையுடையன எனக் கருதி வாழ்தல் புல்லறிவாம், அது இழிவு டையது (குறள், 331) என்பர் திருவள்ளுவர். ஆதலின் அப்பொருள் களில் பற்றின்றி வாழ்ந்தார் என்பார் 'பொய்கடிந்து' என்றார். அறம் என்பது மெய்ப்பொருளாம். பொய்கடிந்து என்பதையடுத்து இச்சொல்நிற்றலின் இப் பொருள்பட நின்றது. இல்லறம், துறவறம் ஆகிய இரண்டும் சிறந்தனவே. எனினும் துறவறத்திற்கு வாயிலா கவும், அந்நெறி நின்றாரையும் பாதுகாக்கும் பாங்குடைய தாகவும் இருத்தல் பற்றி இல்லறம் சிறப்பெனப் புகழப்பெற்றது. 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' (குறள், 49) எனத் திருவள்ளுவர் கூறுவதும் இதுபற்றியாம். ஆதலின் 'வையகம் போற்றும் செய்கை மனையறம்' என்றார். சைவ மெய்ப்பொருள்- சைவ சமயத்தின் மெய்ப் பொருளாகப் போற்றப்படும் பொருள்: சிவபெருமானே யாவர். ஆதலால்தான் இறைவனைச் சைவன் என்னும் பெயராலும் அழைத்தார்கள். சார்பு - பற்றுக் கோடு. 'உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும் உன்னையல்லால் பிறதெய்வம் உள்கே னென்றும்' (தி. 6 ப. 31 பா. 7) வாழ்வது சைவமெய்த்திருவின் சார்பாகும்.

அளவிலா மரபின் வாழ்க்கை
மட்கலம் அமுதுக் காக்கி
வளரிளந் திங்கட் கண்ணி
மன்றுளார் அடியார்க் கென்றும்
உளமகிழ் சிறப்பின் மல்க
ஓடளித் தொழுகு நாளில்
இளமைமீ தூர இன்பத்
துறையினில் எளிய ரானார்.

[ 3]


கால எல்லை கூறற்கியலாததாய் வரும் குயவர் மரபில் வந்ததற்கேற்ப, தாம் செய்யும் மட்கலன்களைத் தாம் வாழ் வதற்கேற்ற ஊதியப் பொருளாக ஆக்கிக் கொண்டு, வளர்கின்ற இளமையினையுடைய மூன்றாம் பிறையாகிய குழவித் திங்களைத் தலையிற் கொண்ட கூத்தப்பெருமானின் அடியவர்களுக்கு, எந்நா ளும் அவர்தம் திருவுள்ளம் மகிழ்தற்குக் காரணமான சிறப்புகள் பெருக, அவர்களுக்குத் திருஓடு கொடுத்து வரும் நாளில், இளமை வயப்பட்ட சிற்றின்ப நெறியில் விருப்புடையவரானார்.

குறிப்புரை: மட்பாண்டம் செய்து வரும் தொழில் மிகப் பழமை யுடையதாகும் 'ஆரியன் குலால னாய்நின் றாக்குவ னகில மெல்லாம்' (சிவஞான சித். சுப. சூ. 1 பா. 18) என இத்தொழில் அமைவு இறைத் தொழிலோடு ஒப்புமைப்படுத்திக் கூறப்படுதலும் காண்க. தம் குலத்திற் கேற்ற தொழில் மட்பாண்டங்கள் செய்வதாகும். இம்மட்பாண்டங் களைத் தம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் அளவில் செய்து கொண்டு, மற்றைய நேரங்களிலெல்லாம் திருஓடுகள் செய்து அவற்றை அடியவர்க்கு வழங்கி மகிழ்வதிலேயே கருத்துடையராய் இருந்தார் என்பார், 'மட்கலம் அமுதுக் காக்கி' என்றார்.
இன்பத்துறை - சிற்றின்பத்திற்குரிய வகைகள். உண்டல், உடுத்தல் முதலியனவும் சிற்றின்பம் எனப்படினும், பெண் வழிப் பெறும் இன்பமே சிற்றின்பம் எனச் சிறப்பித்துச் சொல்லப்பெறும். எளியரானார் என்பது இவ்வின்பத்தில் தலைப்படுவாரானார் என்பது போதர நின்றது. சிற்றின்பங்கள் யாவும் நெறிபிறழாதனவாய் வேண்டுழி ஏற்கவும், விடுத்துழி ஒதுக்கவும் நிற்கற்பாலன. எனவே இவை உயிர்க்கு அடிமையாதல் வேண்டுமேயன்றி, இவற்றிற்கு உயிர் அடிமையாதல் கூடாது. மாறாக இவ்வடியவர் அச்சிற்றின்பத்திற்கு அடிமையானார் என்பார், அச்சொல்லால் கூறாது இன்பத்துறை யினில் 'எளியர் ஆனார்' என்ற அளவிலேயே கூறி மகிழ்விக்கின்றார். இதனையும் அவ்வடியவர் மீது ஏற்றிச்சொல்ல மனம் இல்லாதவராகி 'இளமை மீதூர' என அதற்கோர் ஏதுவும் காட்டிக் கூறினார். அடியவர் வரலாற்றைக் கூறுங்கால் அவர்தம் பெருமையும் பிழையாது, அவர் மீது கொண்ட பத்திமையும் பிறழாது கூறியிருக்கும் திறம் எண்ணி மகிழ்தற்குரியதாம்.

அவர்தங்கண் மனைவி யாரும்
அருந்ததிக் கற்பின் மிக்கார்
புவனங்க ளுய்ய ஐயர்
பொங்குநஞ் சுண்ண யாஞ்செய்
தவநின்று தடுத்த தென்னத்
தகைந்துதான் தரித்த தென்று
சிவனெந்தை கண்டந் தன்னைத்
திருநீல கண்ட மென்பார்.

[ 4]


அந்நாயனாரின் மனைவியாரும் அருந்ததியை யொத்த கற்பிற் சிறந்தவர். சிவபெருமான் உலகமெல்லாம் உய்தற் பொருட்டுப் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்ண, நாம் அனைவரும் செய்த தவமானது அவ்விடத்திலிருந்து தடுத்தாற்போல, அந்நஞ்சு உட்செல்லாது தடுக்கப் பெற்று, தானே அவ்விடத்தில் நின்ற தென்று கருதத்தக்க எம் சிவபெருமானின் திருக்கழுத்தை, எந்நாளும் திருநீலகண்டம் என்று போற்றி வருவார்,.

குறிப்புரை: தேவர்கள் அமுது வேண்டி ஒரு காலத்தில் திருப்பாற் கடலைக் கடைய முற்பட்டு, மேருமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைந்தனர். கடையவே வாசுகி தன் வருத்த மிகுதியால் நஞ்சை உமிழ, அது தேவர்களை வருத்த, மாலயன் முதலியோரும் அதனைத் தகைக்க இயலாது வருந்தினர். பின் இறைவனை வேண்ட, அவன் நஞ்சை உண்டு அது மிடற்றில் தங்கு மாறு செய்தனன். அதனாற் கருமையுற்ற அக்கழுத்தினை நீலகண்டம் என அழைப்பாராயினர். இந்நிகழ்ச்சி தேவர்களை உய்யக் கொள் ளவும், பிறரால் செய்தற்கரிய செயற்கருஞ் செயலாக விளங்கவும் அமைந்தமையின் யாவராலும் எடுத்துப் புகழப்பெறுவதாயிற்று. 'காரி உண்டிக் கடவுள்' (பத்துப்பாட்டு, மலைபடு. வரி, 83) எனவும்,
'விண்ணோரமுதுண்டுஞ் சாவவொரு வரும்
உண்ணாத நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய்'
(சிலப்ப. வேட்டுவ. 21) எனவும் பண்டைப் பனுவல்கள் பாராட்டுவ தும் காண்க. இத்திருவுறுப்பைக் குறிக்கும் திருநீலகண்டம் என்பது மந்திரமுமாம். இதனை இவ்வடியவர் எப்போதும் கூறிவந்ததால் திருநீலகண்டர் என அழைக்கப்பட்டார். 'செய்வினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீல கண்டம்' (தி. 1 ப. 116) எனப் போற்றிக் கூறும் திருப்பதிகம் ஒன்று இருப்பதும், அடியவர் அறுபத்துமூவருள் இருவர் இப்பெயருடையராய் இருப்பதும் ஈண்டு நினைவு கூரத்தகும். திருநீலகண்டம் எனச் சொல்லி வருதலை மனைவியாரின் செயலாக, இந்நூலுக்குத் தாமெழுதிய உரையாக மகாலிங்க ஐயரும் ஆலாலசுந் தரம் பிள்ளையும் உரைப்பர். எனினும் இவ்வரலாற்றுத் தொடக்கம் முதல் இப்பாடல் வரை, அடியவரது செயலாகவே கூறி வந்த ஆசிரியர், அடுத்த செய்யுளில் 'ஆனதம் கேள்வர்' என நிறைவு செய்தலானும் 'ஆதியார் நீலகண்டத்து அளவுதாம் கொண்ட ஆர்வம் பேதியா ஆணைகேட்ட பெரியவர்' எனப் பின்னர்க் கூறலானும், இம்மந்திரம் கூறி வந்தமையினாலேயே இவர் பெயர் அதுவாக அமைந்திருத்தலானும், இம்மந்திரம் அடியவர் சொல்லி வந்ததேயாம் என்பது அறியத்தக்கது.

ஆனதங் கேள்வர் அங்கோர்
பரத்தைபா லணைந்து நண்ண
மானமுன் பொறாது வந்த
ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய வெல்லாஞ் செய்தே
உடனுறைவு இசையா ரானார்
தேனலர் கமலப் போதில்
திருவினு முருவின் மிக்கார்.

[ 5]


தேன் பொருந்திய செந்தாமரை மலரில் விளங்கும் திருமகளைவிடச் சிறந்த அழகினையுடைய மனைவியார், தம் கணவர் அவ்வூரில் ஒருபரத்தையை அணைந்து, தம்முடைய வீட்டிற்கு வர, அதைக் கண்டு மானம் மீதூர, அதனைப் பொறுக்காமல், தம்மிடத்தி னின்றும் தோன்றிய ஊடலால், இல்வாழ்க்கையின் இன்றியமையாக் கடமைகளாய் உள்ள திருவமுதமைத்தல் அதனைக் காலத்தில் கொடுத்துதவுதல் முதலிய செயற்பாடுகளை எல்லாம் செய்து, மெய்யுறு புணர்ச்சிக்கு மட்டும் உடன்படாதவர் ஆயினார்.

குறிப்புரை: ஆன - மேற் கூறியவாறான. மானம் - கணவர் தம் உடன் உறைவிற்குத் தம்மினும் பரத்தையரை உயர்வாகக் கருதியத னால் வந்த மானம். எத்துணைக் கற்புடையாரும் தம் கணவர் தம்மை விடுத்துச் சிற்றின்ப நுகர்ச்சிக்குப் பிறர்பால் செல்லுதலை விரும்பார். இத்தகைய உள்ளமே இவ்வம்மையாரிடத்தும் இருந்தது. 'கற்பு வழிப்பட்டவள் பரத்தையை ஏத்தினும் உள்ளத்து ஊடல் உண்டென மொழிப' (தொல். பொருளியல், 39), ''போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் ஏற்றெழுந்தனன்'' (சிலப்ப. கொலைக். வரி, 81,82) எனவரும் பண்பாட்டின் நெறிமுறை களையும் காண்க. 'திருவினும் உருவமிக்கார்' என்பதால் அவர் தம் உடல் அழகும், 'மனையின் வாழ்க்கை ஏனைய எல்லாம் செய்தே' என்பதால் அவர்தம் உள்ள அழகாம் கற்பு மேம்பாடும் தெரியவருகின்றன.

Go to top
மூண்டவப் புலவி தீர்க்க
அன்பனார் முன்பு சென்று
பூண்டயங் கிளமென் சாயல்
பொற்கொடி யனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி
மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீ ராயின் எம்மைத்
திருநீல கண்ட மென்றார்.

[ 6]


மனைவியாரின் உள்ளத்தெழுந்த அவ்வூடலைத் தீர்க்கும் பொருட்டுத் திருநீலகண்டர், அவரிடத்தில் சென்று, அணிகள் விளங்கும் இளமையான மெல்லிய சாயலையுடைய பொற்கொடி போன்று விளங்கும் அம்மனைவியாரை, அவர் ஊடல் தீர்த்தற்குரிய சொற்களை இரந்து சொல்லி அவ்வளவில் அவரைத் தழுவ முயன்ற பொழுது, தம் ஊடலினின்றும் நீங்காதவராகிய அப்பெருமாட்டி யாரும் 'நீர் எம்மைத் தீண்டுவீரானால் திருநீலகண்டத்தின்மீது வைத்த ஆணை உம்மைத் தடுப்பதாகுக' என்றனர்.

குறிப்புரை: மூண்ட - உள்ளத்தெழுந்த. வேண்டுவ - புலவி நீங்கு தற்கு ஏதுவாய சொற்கள். இரந்து - பணிவான மொழிகளைக் கூறி வேண்டி. 'மனைவி உயர்வும், கிழவோன் பணிவும் நினையுங்காலைப் புலவியுள் உரிய' எனவரும் தொல்காப்பியத்தால் (தொல். பொருளி யல், 33) இத்துணையும் கூறல் இயைவதாயிற்று. 'திருநீலகண்டத்தின் மேல் ஆணையிட்டுக் கூறுகின்றேன், நீர் எம்மைத் தீண்ட வேண்டாம்' எனக் கூறுவார், 'தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்' என்றார். 'இரந்து' என்றதால், கிழவோன் பணிவும், 'எம்மை' என்றதால் மனைவி உயர்வும் புலப்படுதல் காண்க.

ஆதியார் நீல கண்டத்
தளவுதாங் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட
பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி
எம்மைஎன் றதனால் மற்றை
மாதரார் தமையும் என்றன்
மனத்தினுந் தீண்டேன் என்றார்.

[ 7]


எவ்வுயிர்க்கும் முதல்வராய சிவபெருமானின் திருநீலகண்டத்திடத்துத் தாம் வைத்த பெருவிருப்பினின்றும் வேறு படாத, அத்திருவாணையைக் கேட்ட திருநீலகண்டர், அவரைத் தீண்டாமல் அவ்விடத்தினின்றும் சிறிது நீங்கி, எம்மை என்று தன்மைப் பன்மையாகக் கூறியதனால், இம்மாதினையன்றி, வேறு எம்மாதர் களையும் இனி என் மனத்தினாலும் தீண்டமாட்டேன், என உறுதி கூறினார்.

குறிப்புரை: தம் கணவனார் திருநீலகண்டத்தில் பெரும் பற்று உடையராய் அதனையே இடையறாது கூறி வரும் மந்திரமாகக் கொண்டிருத்தலின் அச்சொல்லையே ஆணையாக வைத்து அவர் மனைவியார் கூறினார். அடியவரும் அப்பெருமந்திரத்தின் ஆணை கடவாது ஒழுகுவார், இனி இவரையன்றி வேறு எம்மாதரையும் மனத்தினாலும் தீண்டேன் என உறுதி எடுத்துக் கொள்வாராயினர். 'இந்த இப் பிறவியில் இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்' (கம்ப. சுந்தர. சூடாமணி, 34) என வரும் இராமரின் மனநிலையும் ஈண்டு நினைவு கூரத் தக்கதாம். பேதியா என்பதை முன்னுள்ள ஆர்வத்தோடு கூட்டின், தாம் இதுகாறும் கொண்ட விருப்பத்தினின்றும் வேறுபடாத என்பது பொருளாகும். அதனைப் பின்னுள்ள ஆணை என்பதோடு கூட்டின், தாம் கூறிய இவ் வுறுதி மொழியினின்றும் வேறுபடாத ஆணை என்று பொருள்படும்.

கற்புறு மனைவி யாரும்
கணவனார்க் கான வெல்லாம்
பொற்புற மெய்யு றாமற்
பொருந்துவ போற்றிச் செய்ய
இற்புறம் பொழியா தங்கண்
இருவரும் வேறு வைகி
அற்புறு புணர்ச்சி யின்மை
அயலறி யாமை வாழ்ந்தார்.

[ 8]


அறக் கற்பினையுடைய அவர் மனைவியாரும், தம் கணவனாருக்கு வேண்டிய பணிவிடைகளை எல்லாம் பொலிவு பெறத் தம் உடம்பு அவர் உடம்பைத் தீண்டாதவாறு செய்தற்குரிய வற்றை விரும்பிச் செய்து, தம் இல்லத்தை விடுத்துப் புறம்பே செல்லாதவராய், அவ்விடத்து அவ்விருவரும் வேறு வேறாக இருந்து, அன்பு மீதூருகின்ற புணர்ச்சி ஒன்றும் தவிர்ந்தவராய், இவ்வகையில் தமக் குற்ற பிணக்கை அயலார் அறியாதவாறு காத்து வாழ்ந்து வந்தார்கள்.

குறிப்புரை: கற்புஉறு மனைவியார் - கற்பு என்றஒன்று தான் இருத் தற்கு நிலைக்களன் ஆயது இவ்விடமே எனக் கருதி வந்து பொருந்திய மனைவியார் எனினும் ஆம். 'பேணநோற்றது மனைப் பிறவி' (கம்பர். சுந்தர. காட்சி,73) என வரும் கம்பர் திருவாக்கும் காண்க. மெய்யுறாத நிலையிலும் கணவனாருக்கு ஆனவெல்லாம் செய்ததும். எக்காரணத் தாலும் தம் இல்லத்தை விடுத்துச் செல்லுதல் அறம் அன்று எனக் கருதித் தம் இல்லத்திலேயே வதிந்ததும், அம்மையாரின் அரிய கற்பின் நிலையையும் பண்பு மேம்பாட்டையும் விளக்கி நிற்கின்றன. 'அற்றேல் தணந்தனையாயின் எம்இல் உய்த்துக் கொடுமோ' (குறுந். 354) என்று கூறியது என்னாமோ எனில், அப்பெண்மணியார் தம் சினமிகுதியை யும் அதனாலாய வெறுப்புணர்வையும் காட்டற்கன்றிப் பிறிதன்று என்பதாம். தணந்தனையாயின் என்றது அவன் அப்பெண்மணியா ரைத் தணவாமையும் பெற்றாம். ஏகாரம் - அசைநிலை.

இளமையின் மிக்கு ளார்கள்
இருவரு மறிய நின்ற
அளவில்சீ ராணை போற்றி
ஆண்டுகள் பலவுஞ் செல்ல
வளமலி யிளமை நீங்கி
வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு
தம்பிரான் திறத்துச் சாயார்.

[ 9]


இளமை மீதூர்ந்த திருநீலகண்டரும் அவர் மனைவியாரும் தாம் இருவரும் ஒருங்கு ஏற்று நின்ற அளவில்லாத சீர்மை மிகுந்த திருவாணையைப் போற்றி ஒழுக, ஆண்டுகள் பலவும் சென்றன. வளம் மிக்க இளமைப் பருவம் கழிந்த பின், உடம்பின் கண் மிக்க மூப்புப் பருவம் வந்து மிக இளைத்த பொழுதும், தாம் இது காறும் சிவபெருமானிடத்து வைத்த அன்பினின்றும் நீங்காராயினார்.

குறிப்புரை: திருநீலகண்டம் எனும் அரிய மந்திரத்தை வைத்துச் செய்த ஆணையால் 'அளவில் சீர் ஆணை' என்றார். வடிவுறு மூப்பு - உடம்பின்கண் உற்ற மூப்பு. இனி வடிவு கொண்ட மூப்பு எனினும் ஆம். 'அத்தகைய மூப்பெனும் அதன் படிவமேயோ' (தி. 12 சரு. 1-5 பா. 42) என முன்னர் அருளப் பெற்றதும் காண்க. இனி அழகு பெற்ற மூப்பு வடிவு எனினும் ஆம். 'கண்டதோர் வடிவா லுள்ளங் காதல்செய்து உருகா நிற்கும்' (தி. 12 சரு. 1-5 பா. 42) என முன்னர் அருளப் பெற் றதும் காண்க. சாய்ந்தும் - உள்ளம் ஒடுங்கியும்: 'ஓய்தல், ஆய்தல், நிழத்தல் சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்' (தொல். உரி. 32) என்னும் தொல்காப்பியமும்.

இந்நெறி யொழுகு நாளில்
எரிதளிர்த் தென்ன நீண்ட
மின்னொளிர் சடையோன்
தானுந் தொண்டரை விளக்கங் காண
நன்னெறி யிதுவா மென்று
ஞாலத்தோர் விரும்பி உய்யும்
அந்நெறி காட்டு மாற்றால்
அருட்சிவ யோகி யாகி.

[ 10]


இத்தகைய வாழ்க்கை நெறியில் இவர்கள் ஒழுகி வரும் நாள்களில், நெருப்புத் தளிர்விட்டாற் போலச் சிவந்த நிறத்தையும் நீண்ட மின்னலையொத்து விளங்கும் சடையையும் உடைய சிவபெருமானும், தம் அடியவராகிய திருநீலகண்ட நாயனாரின் பெருமையை யாவரும் அறிதற்கு உரிய நல்வழி இது ஆகும் என்று, அவ்வழியை இவ்வுலகில் உள்ளார் விரும்பி உய்யுமாற்றான் அதனைக் காட்டுதற்கு அருள் மிகுந்த சிவயோகியாக வடிவு கொண்டு.

குறிப்புரை: இறைவனது சடையின் நிறத்திற்கு எரி உவமையா யிற்று. அதன் நீண்ட ஒழுக்கிற்கு மின்னொளி உவமையாயிற்று, 'மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை' (தி. 11 பொன் வண். பா. 1) என வரும் திருவாக்கும் காண்க. கற்புடை மனைவி யோடு வாழும் அடியவரின் பெருமையை விளக்குதற்கு இறைவன் சிவயோகியாக வந்தான் என்பதல்லது, அவரைச் சோதித்தற்கு வந் தான் அல்லன் என்பது அறியத் தக்கது.
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறியும் பெருமா னுக்கு, எவ்வுயிரையும் எந்நிலையிலும் சோதித்தறிய வேண்டும் என்பதில்லை. ஆதலின் இவ்வடியாரிடத்து இறைவன் வருவதும் இதுபோன்றதே. ஏனைய அடியவரிடத்து அவ்வப் பொழுதும் இறை வன் வந்தருளுவதும் அவ்வவ்வடியவர்களின் உரனையும் திறனை யும் உலகறியச் செய்தற்கன்றித் தாம் சோதித்து அருளுதற்கு அன்று என்பதும் அறியத்தக்தது.
'தனிப்பெருந் தருமம் தானோர் #9; தயாவின்றித் தானை மன்னன்
பனிப்பில்சிந் தையினில் உண்மைப் பான்மைசோ தித்தால் என்ன'
(தி. 12 சரு. 1-4 பா. 22)
எனக் கூறியவிடத்தும், ''சோதித்தால் என்ன' என்றதல்லது, சோதித் தது என்றில்லாமை அறியத்தக்கது. அன்றியும் அச்செயற்கு அறம் முற்பட்டாற் போன்றிருந்தது என்பதன்றி, இறைவன் முற்பட்டான் என்றில்லாமையும் அறியத் தக்கது.

Go to top
கீளொடு கோவணஞ் சாத்திக் கேடிலா
வாள்விடு நீற்றொளி மலர்ந்த மேனிமேல்
தோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்
நீளொளி வளர்திரு முண்ட நெற்றியும்.

[ 11]


கீளும் கோவணமும் கொண்டு, அழியாத ஒளியை வீசுகின்ற திருவெண்ணீற்றின் ஒளி பரப்பும் திருமேனியின்கண் இடத்தோளோடு சேர்ந்து மார்பில் அசைகின்ற பூணூலுடனே, பேரொளி வீசுகின்ற திருநீற்றை முக்கீற்று வடிவாகத் தீட்டிய நெற்றியும்.

குறிப்புரை: கீள் - தகட்டு வடிவாக நூலால் நெய்யப் பெற்ற அரை ஞாண். இஃது இடுப்பில் கட்டப் பெறுவது. 'கீள் உடையும் கொண்ட உருவம்' 'கீளார் கோவணமுந் திரு நீறுமெய்ப் பூசி' (தி. 7 ப. 24 பா. 2) 'கீளலா லுடையு மில்லை' (தி. 4 ப. 40 பா. 7) எனவரும் திருவாக்கு களால் இவ்வுடை, பெருமானும் அவரடியவரும் அணியத்தக்க சிறப் புடையது என்பதறியலாம். வாள் - ஒளி. துவளும் - அசையும். திரு முண்டம் - முக்கீற்று வடிவாக அணியும் திருநீறு.

நெடுஞ்சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங்கதிர் முறுவல்வெண் ணிலவும் மேம்பட
இடும்பலிப் பாத்திர மேந்து கையராய்
நடந்துவேட் கோவர்தம் மனையை நண்ணினார்.


[ 12]


நெடுஞ்சடை மறையுமாறு சுருண்டுகிடக்கும் தலைமயிரும், ஒளிவீசுகின்ற பற்களினின்றும் தோன்றும் வெள்ளிய நிலவும், மேம்படப், பிச்சை ஏற்றற்குரிய கலத்தை ஏந்திய வலத் திருக்கையும், உடையவராய் எழுந்தருளித் திருநீலகண்டர் மனையை அடைந்தார்.

குறிப்புரை: இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின. நெடுஞ்சடை - நீண்டசடை: நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை' (புறநா. 166) என்னும் புற நானூறும். நெறித்த சுருண்டு கிடந்த. பம்பை - கீழ்வீழ்ந்து தொங்காமல் தம்பிடரியின் அளவாக உள்ள தலைமயிர்.

நண்ணிய தவச்சிவ யோக நாதரைக்
கண்ணுற நோக்கிய காத லன்பர்தாம்
புண்ணியத் தொண்டராம் என்று போற்றிசெய்
தெண்ணிய உவகையால் எதிர்கொண் டேத்தினார்.

[ 13]


தம் மனைக்கண் இவ்வாறு எழுந்தருளிய தவத்தினையுடைய சிவயோகியாராகிய பெருமானாரைத் தம்முடைய கண்களால் கண்டு மகிழ்ந்த திருநீலகண்டர், இவர் புண்ணிய வடிவுடைய ஒரு சிவனடியார் ஆவர் என்று கருதிப் போற்றி, மகிழ்ச்சியால் நன்கு வரவேற்பதற்குரிய இன்னுரைகளோடு எதிர் கொண்டு வழிபட்டார்.

குறிப்புரை: எண்ணியவகை - நன்கு மதிக்கத்தகுந்த வகையில். தாம் - அசை நிலை.

பிறைவளர் சடைமுடிப் பிரானைத் தொண்டரென்று
உறையுளில் அணைந்துபே ருவகை கூர்ந்திட
முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள்
நிறைபெரு விருப்பொடு செய்து நின்றபின்.

[ 14]


இளம் பிறை வளர்தற்கிடனாகிய சடைமுடியினை யுடைய சிவபெருமானை, அவர் அடியார் என்று கருதி அவரை அழைத்துக் கொண்டு தம்முடைய வீட்டிற்குச் சென்று, பெருமகிழ்வு மிக, அடியவர்களை ஏற்றுப் போற்றுதற்கான வழிபாடுகளை முறைமை யாகத் தம் உள்ளத்து நிறைந்த பெருவிருப்போடு செய்து நிறைவுற்ற பின்,

குறிப்புரை: 'திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி' (தி. 4 ப. 11 பா. 5) என்பதால் 'பிறைவளர் சடை' என்றார். உறையுள் - இருப்பிடம்: திரு நீலகண்டரின் இல்லம். மொழிந்த பூசைகள் - அடியவரை வழிபடுதற் கென அமைந்த முறை. அது 'கொண்டு வந்து மனைப்புகுந்து' எனப்பின்னர்வரும் திருப்பாடலில் (தி. 12 பு. 4 பா. 4) விளக்கப்படும்.

எம்பிரான் யான்செயும் பணிஎது என்றனர்
வம்புலா மலர்ச்சடை வள்ளல் தொண்டனார்
உம்பர்நா யகனும்இவ் வோடுன் பால்வைத்து
நம்பிநீ தருகநாம் வேண்டும் போதென்று.

[ 15]


நறுமணம் கமழும் மலர்களைத் திருச்சடையின் கண் கொண்டிலங்கும் சிவபெருமானின் அடியவராகிய திருநீலகண் டர், எம் தலைவனாக உள்ள பெருமானே! அடியேன் மேதகவமைந்த தங்கட்குச் செய்யத்தகும் பணிவிடை யாது? என்று வினாவினர். சிவபெருமானாகிய சிவயோகியாரும், சிறந்த திருத்தொண்டனே! இத்திருவோட்டை உன்னிடத்தில் வைத்திருந்து நாம் விரும்பும் பொழுது நீ கொடுப்பாயாக, என்று கூறி.

குறிப்புரை: வம்பு - நறுமணம்.

Go to top
தன்னையொப் பரியது தலத்துத் தன்னுழைத்
துன்னிய யாவையுந் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்னதன் மையதிது வாங்கு நீயென.

[ 16]


இவ்வோட்டினை ஒப்பிடின் தனக்குத் தானே ஒப்பானது. இவ்வுலகில் தன்னிடத்தில் சேர்ந்த பொருள்கள் அனைத் தையும் தூய்மையாக்குவது. இது பொன், மணிகள், ஆகியவற்றைக் காட்டிலும் போற்றத்தக்கது. இத்தகைய சிறப்புடைய இவ்வோட்டை நீ வாங்குக எனக் கொடுக்க,

குறிப்புரை: ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் ஞானியர் தம் திருக்கையில் இருப்பதாதலின் இத்துணைப் பெருமை உடையதா யிற்று. இவருக்கு ஓடும் கவந்தியும் அல்லது உறவில்லை என்பதும் அறியத்தக்கது. வாங்கு நீ என்றார், இவ்வோட்டை மீண்டும் என்னி டத்தில் கொடுத்தற்குரியை அல்லை என்னும் குறிப்புப் புலப்பட.

தொல்லைவேட் கோவர்தங் குலத்துள் தோன்றிய
மல்குசீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு
ஒல்லையின் மனையிலோர் மருங்கு காப்புறும்
எல்லையில் வைத்துவந் திறையை யெய்தினார்.

[ 17]


பழமை வாய்ந்த குயவர்தம் குலத்தில் தோன்றிய நிறைந்த புகழினையுடைய திருநீலகண்டர், அத்திருவோட்டைத் தொழுது வாங்கிக் கொண்டு, விரைவாகத் தம் வீட்டில் காப்புமிக்க தோர் இடத்தில் வைத்து, மீண்டும் சிவபெருமானாகிய சிவயோகியை அடைந்தார்.
குறிப்புரை: ஒல்லையின் - விரைந்து. காப்புறும் எல்லையில் - பிறர் எவரும் அறியாதவாறு காப்பு மிக்கதோர் இடத்தில். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

வைத்தபின் மறையவ ராகி வந்தருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்துடன் போய்விடை கொண்டு மீண்டனர்
அத்தர்தாம் அம்பல மணைய மேவினார்.

[ 18]


தம் திருவோட்டைத் திருநீலகண்டர், காப்பான தோர் இடத்தில் வைத்தார் என்பதை அறிந்த சிவயோகியாராகிய பெருமான், அவ்விடத்தினின்றும் பெயர்ந்தாராக, அங்கிருந்த திருநீல கண்டரும் அவருடன் சிறிது தூரம் சென்று பின் விடைபெற்று மீண்ட னர். இறைவரும் தம் திருவம்பலத்தை அடைந்தார்.

குறிப்புரை: தம் இல்லத்திற்குப் பெரியவர்கள் வந்து செல்லின், அவரைச் சிறிது தூரம்வரை சென்று, பின் அவரிடம் விடைபெற்று வருதல் மரபாகும். ஆதலின் 'உய்த்துடன் போய் விடைகொண்டு மீண்டனர்' என்றார்.

சாலநாள் கழிந்த பின்பு
தலைவனார் தாமுன் வைத்த
கோலமார் ஓடு தன்னைக்
குறியிடத் தகலப் போக்கிச்
சீலமார் கொள்கை யென்றுந்
திருந்துவேட் கோவர் தம்பால்
வாலிதாம் நிலைமை காட்ட
முன்புபோல் மனையில் வந்தார்.

[ 19]


இந்நிகழ்ச்சிக்குப் பின் பல நாள்கள் கழிந்த நிலையில், சிவயோகியார் தாம் முன்பு அவரிடத்து வைத்த அழகிய திருவோட்டை அவர் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தினின்றும் மறையச் செய்து, சிறப்பு அமைந்த பத்திமையினால் என்றும் திருந்திய குணத்தை உடைய திருநீலகண்டரிடத்துள்ள தூய அப்பத்திமையைப் பிறரும் உணருமாறு செய்ய, முன்பு வந்தது போன்ற வேடங் கொண்டு,
அவர் மனைக்கு எழுந்தருளினார்.

குறிப்புரை: கோலம் ஆர் ஓடு - அழகு மிக்க திருவோடு. இவ்வழகு மேல் 375ஆம் பாடலில் குறிக்கப்பெற்றது. குறியிடத்து - குறிப்பாக வைத்திருந்தவிடத்து. வாலிதாம் நிலைமை - தூய அன்பு கொண்ட அவர்தம் நிலைமை. 'வாலிதாம் இன்பமாம்' என முன்னர் வந்த ஆட்சியும் (தி. 12 சரு. 1-5 பா. 107) காண்க.

வந்தபின் தொண்ட னாரும்
எதிர்வழி பாடு செய்து
சிந்தைசெய் தருளிற் றெங்கள்
செய்தவ மென்று நிற்ப
முந்தைநா ளுன்பால் வைத்த
மொய்யொளி விளங்கும் ஓடு
தந்துநில் என்றான் எல்லாந்
தான்வைத்து வாங்க வல்லான்.

[ 20]


இவ்வாறு யோகியார் தம் மனைக்கு எழுந்தருளிய பின்பு, திருநீலகண்டரும் எதிர் கொண்டு அழைத்து வந்து, முறைமை யாக வழிபாடும் செய்து, 'பெருமான் அடியேன் இல்லத்திற்குத் திரு வுளங்கொண்டு எழுந்தருளியது நாங்கள் செய்த பெருந்தவமே யாகும்' என்று கூறி, அவர் திருமுன் நிற்ப, எல்லாப் பொருள்களையும் தானே வைக்கவும் வாங்கவும் வல்லானாகிய அச்சிவயோகியாராம் இறைவன், 'முன்னாள் நின்னிடத்தில் யான் வைத்த பேரொளி மிக்க திருஓட்டினை எனக்கு அளித்து நிற்பாயாக' என்று அருளிச் செய்தார்.
குறிப்புரை: 'விச்ச தின்றியே விளைவு செய்குவாய், விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்கு' (தி. 8 ப. 5 பா. 96) வல்லவனாய்த் தோன்ற, 'எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்' என்றார். அத்தகைய பெருமையுடையோனுக்கு, இத்திருவோட் டினையும் வைத்து வாங்கல் அரிதோ? அன்று, என்றவாறு. தந்துநில் என்பது மீளஅத்திருவோட்டை என்னிடம் கொடுத்த பின், எதனையும் செய்க என்னும் குறிப்பினது. விரைவும் அச்சுறுத்தலும் தோன்ற நின்றது.

Go to top
என்றவர் விரைந்து கூற
இருந்தவர் ஈந்த ஓடு
சென்றுமுன் கொணர்வான் புக்கார்
கண்டிலர் திகைத்து நோக்கி
நின்றவர் தம்மைக் கேட்டார்
நேடியுங் காணார் மாயை
ஒன்றுமங் கறிந்தி லார்தாம் 
உரைப்பதொன் றின்றி நின்றார்.

[ 21]


இவ்வாறு விரைவும் அச்சுறுத்தலும் தோன்றக் கூறிய அம்மறையவர் திருவோட்டினை, விரைந்து வாங்குதற்குரிய குறிப்போடு கூற, அப்பெருமுனிவர் தந்தருளிய அத்திருவோட்டைத் தம் மனையில் முன் வைத்த இடத்திற்குச் சென்று கொண்டுவருதற்குப் புகுந்த திருநீலகண்டர், அத்திருவோட்டைக் காணாமல் திகைத்துப் பார்த்து, அங்கிருந்தோரை அத்திருவோட்டை யாவரேனும் எடுத்தீர் களா? என்று வினவிக் கொண்டே பிற இடங்களில் தேடியும் காணாதவ ராய், இவ்வாறு மறைந்த மாயை ஒன்றையும் அறியாது, தாம் அச்சிவ யோகியாருக்கு எவ்வித மாற்றமும் கூற இயலாதவராகி அம்மனையி டத்து நின்றிருந்தார்.

குறிப்புரை: கொணர்வான் - கொண்டுவருதற்காக. வான்ஈற்று வினையெச்ச வாய்பாடு.

மறையவ னாகி நின்ற
மலைமகள் கேள்வன் தானும்
உறையுளிற் புக்கு நின்ற
ஒருபெருந் தொண்டர் கேட்ப
இறையிலிங் கெய்தப் புக்காய்
தாழ்த்ததென் னென்ன வந்து
கறைமறை மிடற்றி னானைக்
கைதொழு துரைக்க லுற்றார்.

[ 22]


சிவயோகியாராக நின்ற உமை ஒரு கூறனாகிய சிவபெருமானும், திருவோட்டை எடுத்து வருதற்கென உட்சென்று, வருதற்குத் தாழ்த்து நின்ற ஒப்பற்ற பெருமையினையுடைய அத்திரு நீலகண்டர் கேட்குமாறு, 'இவ்விடத்து மிக விரைவில் எடுத்து வருவதாக மனையுள் புகுந்த நீர், இத்துணைக்காலம் தாழ்ப்பது ஏன்?' என்று கூற, அதுகேட்ட அடியவரும், விரைய வந்து நீலகண்டத்தை மறைத்து வந்திருந்த சிவபெருமானாகிய யோகியாரைக் கைகளால் தொழுது சொல்லத் தொடங்கினார்.

குறிப்புரை: உறையுள் - மனையகம். இறையில் - விரைவில். கறை மறை மிடறு - நீலநிறம் மறைந்துநிற்கும் திருக்கழுத்து.

இழையணி முந்நூன் மார்பின்
எந்தைநீர் தந்து போன
விழைதரும் ஓடு வைத்த
வேறிடந் தேடிக் காணேன்
பழையமற் றதனில் நல்ல
பாத்திரந் தருவன் கொண்டிப்
பிழையினைப் பொறுக்க வேண்டும்
பெருமவென் றிறைஞ்சி நின்றார்.

[ 23]


'நூல் இழைகளால் அழகுபெறச் சேர்க்கப்பெற்ற முந்நூலையணிந்த மார்பினையுடைய எம்முதல்வரே! நீவிர் என்னிடத்துக் கொடுத்துச் சென்ற விரும்பத்தகும் அத்திருஓடு வைத்தவிடத்தும் பிறவிடத்தும்கூடத் தேடிக்கண்டிலேன். பெருமானே! நும் பழைய திரு ஓட்டினும் புதிதாக வனையப்பெற்றிருக்கும் நல்ல திரு ஓட்டினைத் தருகின்றேன்; அதனை ஏற்று இப்பிழையைப் பொறுத்தருள வேண்டும்' என்று வணங்கி விண்ணப்பித்து நின்றார்.

குறிப்புரை: இழை - நூல்இழை: ஒன்பது கொண்ட மூன்று புரிநுண்ஞாண். வைத்த இடம் வேறிடம் எனத் தனித்தனிக் கூட்டுக. பழைய ஓடு ஆதலால் அது அழகு கெட்டிருக்கும், விரைவில் அழியத் தக்கதாயும் இருக்கும். அவ்வோட்டிற்கு மாறாகப் புதிதாகத் தரும் நல்ல ஓடு என்றால் அழகுடையதாகவும் இருக்கும், நீடித்த பயனுடைதாகவும் இருக்கும் என்பார் 'பழைய மற்றதனில் நல்ல பாத்திரம் தருவன்' என்றார். எனினும் கொடுத்த பொருளைத் திரும்பத் தாராதது பிழையே என்பார் 'பிழையினைப் பொறுக்க வேண்டும்' என்றும் வேண்டினார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

சென்னியால் வணங்கி நின்ற
தொண்டரைச் செயிர்த்து நோக்கி
என்னிது மொழிந்த வாநீ
யான்வைத்த மண்ணோ டன்றிப்

பொன்னினா லமைத்துத் தந்தாய்
ஆயினுங் கொள்ளேன் போற்ற முன்னைநான் வைத்த வோடே
கொண்டுவா வென்றான் முன்னோன்.

[ 24]


இவ்வாறு தலைவணங்கித் தம்மை வேண்டிக் கொண்ட திருநீலகண்டரைச் சினந்து, பார்த்து, ''இவ்வாறு நீ கூறியது தான் என்னாம்? யான் உன்னிடத்து வைத்த மண் ஓடேயன்றிப் பொன்னால் செய்ததொரு ஓட்டைக் கொடுத்தாயாயினும் அதனைக் கொள்ளமாட்டேன். காப்பாற்றித் தருமாறு முன்னை நாளில் நான் கொடுத்து வைத்த அவ்வோட்டினையே கொண்டு வா' என்று எவ்வு யிர்க்கும் முன்னோனாகிய அவ்யோகியார் கூறினார்.

குறிப்புரை: செயிர்த்து - சினந்து. போற்ற - காப்பாற்றி வைக்குமாறு கூறிய, முன்னோன் - எவ்வுயிர்க்கும் காலத்தாலும் சீலத்தாலும் பேரருள் திறத்தாலும் முதல்வனாய் இருப்போன்: 'முன்னோன் காண்க முழுதோன் காண்க' என்னும் (தி. 8 ப. 3 வரி. 29) திருவாசகமும்.

கேடிலாப் பெரியோய் என்பால்
வைத்தது கெடுத லாலே
நாடியுங் காணேன் வேறு
நல்லதோர் ஓடு சால
நீடுசெல் வதுதா னொன்று
தருகின்றேன் எனவுங் கொள்ளாது
ஊடிநின் றுரைத்த தென்றன்
உணர்வெலா மொழித்த தென்ன.

[ 25]


என்றும் கெடுதலில்லாத பெரியோனே! நீர் என்னிடத்து வைத்த திருஓடு காணாதாக, அதனை எவ்விடத்தும் தேடியும் யான் காணேன் அதனின் நல்லதொரு திருஓடு மிக நீண்ட காலம் நீடித்துப் பயன்படத்தக்கதாய் இருப்பதொன்றைக் கொடுக்கின் றேன் என்று சொல்லவும், அதனை ஏற்றருளாது சினந்து அதனையே கொடு என்று கூறியது, என் உணர்வு முழுமையையும் ஒழித்துவிட்டது என்று அடியவர் கூற.

குறிப்புரை: இறைவன் ஈறிலாதவன் ஆதலின் 'கேடிலாப் பெரியோய்' என்றார். ஓர் இடத்தில் வைத்த பொருள் அவ்விடத்தில் இல்லை என்றால், வேறிடத்திலும் தேடிப் பார்ப்பது இயற்கை.
அவ்வாறு தேடியும் காணவில்லையெனில் அதுபோன்ற தொன்றைக் கொடுத்தலே அமைவதாகும். அவ்வமைவைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளாத போது அதற்கு மேலாகவும் சிந்தனை செய்வதற்கு ஒன்று இன்மையின் 'என் உணர்வெல்லாம் ஒழித்தது' என்றார்.

Go to top
ஆவதென் நின்பால் வைத்த
அடைக்கலப் பொருளை வௌவிப்
பாவகம் பலவும் செய்து
பழிக்குநீ யொன்றும் நாணாய்
யாவருங் காண உன்னை
வளைத்துநான் கொண்டே யன்றிப்
போவதுஞ் செய்யே னென்றான்
புண்ணியப் பொருளாய் நின்றான்.


[ 26]


'இனி நின்னிடத்து ஆக வேண்டியது என்ன? நின்னிடத்து அடைக்கலமாக யான் வைத்த பொருளைக் கவர்ந்து கொண்டு, அதனை மறைத்தற்குரிய வஞ்சனையான நடிப்பைச் செய்து, பழியான இச்செயல் செய்ததற்கு, நீ சிறிதும் நாணாதவனாய் இருக்கின்றாய். அதனால் இவ்வூரில் உள்ளார் யாவரும் காண உன்னைப் பற்றிக் கொண்டு, என்திருஓட்டைப் பெற்றுக் கொள்வ தல்லால் இவ்விடத்தினின்றும் யான் போகவும் மாட்டேன்' என்று புண்ணியத்தின் வடிவாய் நின்ற அச்சிவயோகியார் கூறினார்.

குறிப்புரை: பாவகம் பலவும் செய்து - பிறர் நம்புமாறு நடிப்பாகப் பல செயல்களையும் செய்து (பாசாங்கு செய்து). வளைத்துப்பற்றி - எங்கும் செல்ல ஒட்டாது, தடுத்து நின்னைப் பற்றி. 'தொடுத்தும் கொள்ளாதமையலன்' (புறநா. 164), 'இம்மையே உன்னைச் சிக் கெனப்பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே' (தி. 8 ப. 37 பா. 3) எனவரும் திருவாக்குகளையும் நோக்குக.
'பாவகம் பலவும் செய்து' என்பதால், சிவோகம் பாவனை செய்து கைவந்தவர் என்றும், பழிக்கு நீ நாணாய் என்பதால் 'நாடவர் பழித்துரை பூணதுவாகக் கொள்வாய்' என்றும், 'வளைத்து நான் கொண்டேயன்றி' என்பதால், நின்னையும் நின் வாழ்க்கைத் துணை யையும் சேர்த்து என் உலகத்திற்குக் கொண்டு செல்லல் அன்றி இங்கு விடேன் என்றும் குறிப்புப் பொருள்பட நின்றன என்பார் சிவக் கவிமணியார் (பெரிய. பு. உரை)

வளத்தினான் மிக்க ஓடு
வௌவினேன் அல்லேன் ஒல்லை
உளத்தினுங் களவி லாமைக்
கென்செய்கேன் உரையு மென்னக்
களத்துநஞ் சொளித்து நின்றான்
காதலுன் மகனைப் பற்றிக்
குளத்தினின் மூழ்கிப் போவென்
றருளினான் கொடுமை யில்லான்.

[ 27]


'பொருளும், அருமையும் ஆய வளங்களால் அத்திருவோட்டைக் கவர்ந்து கொண்டேன் அல்லேன். என் மனத் தகத்தும் அக்கள்ளமில்லாமையைக் காட்டுதற்கு யாது செய்வேன்?' என்று கேட்க, திருமிடற்றின்கண் உள்ள நஞ்சினால் ஆய கருமையை மறைத்து நின்ற சிவபெருமானாகிய கொடுந்தன்மையற்ற சிவ யோகியானவர், 'நின் விருப்பத்திற்குரிய நின் மகன் கையைப் பிடித்துக் கொண்டு திருக்குளத்தில் மூழ்கியவாறு நான் எடுக்கவில்லை என்னும் உறுதி மொழியைக் கூறிச் செல்க' என்றருளிச் செய்தார்.

குறிப்புரை: உளத்தினும் களவிலாமைக்கு என்செய்கேன் என்பது அதன் வழி வரும் சொல்லானும் செயலானும் கூடக் களவின்மையை உணர்த்தியவாறாயிற்று. 'உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொரு ளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்' (குறள், 282) என வரும் திருக் குறளையும் நினைவு கூர்க. அடியவரிடத்து இத்துணைக் கடுமையாக நடந்துகொள்வதும் அவர் பெருமையை உலகிற்குக் காட்டவும், அவர்வழி அவர்தம் மனைவியாரையும் ஆட்கொள்ளவுமேயாம், என்பது தோன்றக் 'கொடுமையில்லான்' என்றார்.

ஐயர்நீ ரருளிச் செய்த
வண்ணம்யான் செய்வ தற்குப்
பொய்யில்சீர்ப் புதல்வ னில்லை
என்செய்கேன் புகலு மென்ன
மையறு சிறப்பின் மிக்க
மனையவள் தன்னைப் பற்றி
மொய்யலர் வாவி புக்கு 
மூழ்குவாய் எனமொ ழிந்தார்.

[ 28]


'அருள் மிக்க அடிகளே! நீர் அருளிச் செய்த வண்ணம் அடியேன் செய்தற்குக் குற்றமற்ற சிறப்பினையுடைய மகன் இல்லை. யான் அதற்கு என்செய்வேன்! அருளிச் செய்யும்' என்று விண்ணப்பம் செய்ய, 'குற்றமற்ற சிறப்பால் உயர்ந்த உன் மனைவி யின் கையைப் பிடித்துக்கொண்டு நெருங்கிய மலர்களையுடைய திருக் குளத்திற்குச் சென்று மூழ்கியவாறு உறுதி கூறுவாயாக' என்றருளினார்.

குறிப்புரை: 'மற்றதன் நன்கலம் நன் மக்கட்பேறு' (குறள், 60) 'மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே' (புறநா. 188) என வருவனவற்றால் மக்கட் பேற்றின் அருமை விளங்கும். அத்தகைய சிறப்பு மிக்க மகவில்லை என்பார் 'பொய்யில் சீர்ப் புதல்வன் இல்லை' என்றார்.

கங்கைநதி கரந்தசடை
கரந்தருளி யெதிர்நின்ற
வெங்கண்விடை யவர்அருள
வேட்கோவ ருரைசெய்வார்
எங்களிலோர் சபதத்தால்
உடன்மூழ்க இசைவில்லை
பொங்குபுனல் யான்மூழ்கித்
தருகின்றேன் போதுமென.

[ 29]


கங்கையை உள்ளடக்கியிருக்கும் திருச்சடை முடியை மறைத்தருளி, தம்முன் எதிராக எழுந்தருளி நிற்கும் சினம் மிக்க கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டருளும் சிவபெருமானாகிய யோகியார், இவ்வாறு அருளிச் செய்ய, திருநீல கண்டர் அதற்கு மறுமொழி கூறுவாராய், யானும் என் மனையாளும் ஒரு சூளுறவால் கையைத் தீண்டி மூழ்குதற்கு இயலாதுள்ளது ஆதலின், நீர் மிக்க திருக்குளத்தில் நானே மூழ்கி என் உறுதிப்பாட்டை மெய்ப்பிக் கின்றேன்; வாரும் என்று சொல்ல.

குறிப்புரை: சூளுறவு - சபதம்.

தந்ததுமுன் தாராதே
கொள்ளாமைக் குன்மனைவி
அந்தளிர்ச்செங் கைப்பற்றி
அலைபுனலின் மூழ்காதே
சிந்தைவலித் திருக்கின்றாய்
தில்லைவா ழந்தணர்கள்
வந்திருந்த பேரவையில்
மன்னுவன்யா னெனச்சொன்னார்.

[ 30]


நான் முன் கொடுத்த திருவோட்டைக் கொடுக் காமலும், அதனை நான் வஞ்சித்து எடுத்துக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவிப்பதற்கு உன் மனைவியின் அழகிய தளிர் போன்ற சிவந்த கையைப் பிடித்து அலை வீசுகின்ற நீரின் மூழ்கிச் சொல்லா மலும், மனத்தை வலிமை செய்து கொண்டிருக்கின்றாய். தில்லைவாழ் அந்தணர்கள் வந்து கூடியிருந்த பெருமை வாய்ந்த ஊர்ச் சபையில் இவ்வழக்கைச் சென்று சொல்லுவன்' என்று அருளிச் செய்தார்.

குறிப்புரை: தில்லைவாழ் அந்தணர்கள் வந்திருந்த பேரவையின் மன்னுவன் யான் - தில்லைவாழ் அந்தணர்கள் கூடியிருக்கும் பேரம் பலத்தில் என்றும் வாழ்ந்திருப்பவன் யான் எனும் பொருளும் அமைய இருப்பது அருமையுடைத்தாம். ஏ இரண்டும் அசை நிலைகள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
நல்லொழுக்கந் தலைநின்றார்
நான்மறையின் துறைபோனார்
தில்லைவா ழந்தணர்கள்
வந்திருந்த திருந்தவையில்
எல்லையிலான் முன்செல்ல
இருந்தொண்ட ரவர்தாமும்
மல்குபெருங் காதலினால்
வழக்கின்மே லிட்டணைந்தார்.

[ 31]


நல்லொழுக்கத்தில் முதன்மையாக நிற்பவர்களும், நான் மறைகளாகிய கடலின் கரையைக் கண்டவர்களும்ஆகிய தில்லைவாழ் அந்தணர்கள் கூடியிருந்த திருத்தமான ஊர்ச்சபை யிடத்து, அளவிறந்த குணங்களையுடைய சிவயோகியார் முன்னே எழுந்தருள, பெருமை மிக்க திருநீலகண்டரும் மிகுந்த பேரன்போடு அவ் வழக்கை மேற்கொண்டு பின் சென்றார்.

குறிப்புரை: திருந்து அவை - அறிவானும் பண்பானும் திருந்திய அவை. ஆன்றோர் தம்மிடத்து வந்த வழக்கையும் திருந்திய முறையில் தீர்த்து வைப்பர் என்பது பற்றித் 'திருந்தவை' என்றார். தாம் திருந்தியும், பிறர் திருந்துமாறும் செய்து வரும் அவை. 'சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி' (குறள், 118) என்பர் திருவள்ளுவரும்.

அந்தணனாம் எந்தைபிரான்
அருமறையோர் முன்பகர்வான்
இந்தவேட் கோவன்பால்
யான்வைத்த பாத்திரத்தைத்
தந்தொழியான் கெடுத்தானேல்
தன்மனைவி கைப்பற்றி
வந்துமூழ் கியுந்தாரான்
வலிசெய்கின் றான்என்றார்.


[ 32]


மறையவர் வடிவில் வந்த எம் சிவயோகியாரும் அரிய நான்மறைகளை உணர்ந்த தில்லைவாழ் அந்தணர்கள் கூடி யிருந்த பேரவையில் இவ்வாறு அருளிச் செய்வார்: 'இந்தத் திருநீல கண்டக் குயவன், யான் அவனிடத்துக் கொடுத்து வைத்த திரு வோட்டைத் திருப்பிக் கொடுக்காதிருக்கின்றான்; அதனைக் கெடுத் திருப்பனாயின் அதை உறுதி செய்தற்குத் தன் மனையாள் கையைப் பற்றி வந்து குளத்தில் மூழ்கிச் சொல் என்றால் அதுவும் செய்யாதிருக் கின்றான்; வன்கண்மை உடையனாய் இருக்கின்றான்' என்று கூறினார்.

குறிப்புரை: 'கெடுத்தானேல்' என்றார் அதுதனக்கு உடன் பாடில்லை என்பது காட்டற்கு.

நறைகமழுஞ் சடைமுடியும்
நாற்றோளும் முக்கண்ணும்
கறைமருவுந் திருமிடறுங்
கரந்தருளி எழுந்தருளும்
மறையவனித் திறமொழிய
மாமறையோர் உரைசெய்வார்
நிறையுடைய வேட்கோவர்
நீர்மொழியும் புகுந்ததென.

[ 33]


நறுமணம் கமழும் சடைமுடியினையும், நான்கு திருத்தோள்களையும், முக்கண்களையும், கருநிறம் பொருந்திய திருக் கழுத்தினையும் மறைத்துக் கொண்டு சிவயோகியராய் எழுந்தருளி வந்த மறையவர் இவ்வாறு கூற, பெருமை பொருந்திய தில்லையி லிருக்கும் ஊரவையினரும், 'சால்பமைந்த திருநீலகண்டரே! இது பற்றிய நும் கருத்தைச் சொல்லுவீராக' என்று கூற.

குறிப்புரை: 'நிறை எனப்படுவது மறைபிறர் அறியாமை என்பர்' (கலித். நெய். 16). அவ்வரும் பண்பை உடையவராதல் பற்றி 'நிறையுடைய வேட்கோவர்' என்றார்.

நீணிதியாம் இதுவென்று
நின்றவிவர் தருமோடு
பேணிநான் வைத்தவிடம்
பெயர்ந்துகரந் ததுகாணேன்
பூணணிநூன் மணிமார்பீர்
புகுந்தபரி சிதுவென்று
சேணிடையுந் தீங்கடையாத்
திருத்தொண்டர் உரைசெய்தார்.


[ 34]


'பெருஞ் செல்வம் இதுவென்று கூறி இங்கு நிற்கும் இப்பெரியவரால் முன் கொடுக்கப்பட்ட திருஓடு நான் பெரிதும் பாதுகாத்து வைத்த இடத்தினின்றும் மறைந்து விட்டது. அவ்விடத் திலன்றிப் பிறவிடத்தும் தேடிக் கண்டிலேன். முப்புரி நூலை அணியாக மார்பில் கொண்டிருக்கும் மறையவர்களே! நடந்த நிகழ்ச்சி இதுவாம்' என்று, தீங்கென்பது நெடுந்தொலைவிலும் தம்மை அடையாதவராய திருநீலகண்டர் கூறினார்.

குறிப்புரை: கொடுத்ததைத் தாராமலும், பெரியவர் கூறுமாறு சூளுறாமலும், பேரவையின் தீர்ப்புக்கு முன்னிற்கும் இவ்வடிய வர்க்குத் தீங்கு வந்து விடுமோ! என்று ஐயுறாது இருத்தற் பொருட்டு, அண்மையில் மட்டுமன்றிச் சேய்மையிலும் அவருக்குத் தீங்கு வாராது என்பார், 'சேணிடையும் தீங்கடையாத் திருத் தொண்டர்' என்றார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

திருவுடை யந்த ணாளர்
செப்புவார் திகழ்ந்த நீற்றின்
உருவுடை யிவர்தாம் வைத்த
வோட்டினைக் கெடுத்தீ ரானால்
தருமிவர் குளத்தின் மூழ்கித்
தருகவென் றுரைத்தா ராகில்
மருவிய மனைவி யோடு
மூழ்குதல் வழக்கே யென்றார்.

[ 35]


இருவர்தம் கூற்றையும் கேட்ட ஞானச் செல்வத் தையுடைய அவ்வவையோர், தீர்ப்புச் சொல்வார்களாய், விளங்கிய திருஓட்டை நீர் வைத்த விடத்துக் காணீராயின், அத்திரு ஓட்டை உம்மிடத்துக் கொடுத்த இவர், குளத்தில் மூழ்கி அச் சொல்லை உறுதி செய்து தருவீராக என்று கூறுவாரானால், அவர் கூறுமாறு நீர், நும் இல் வாழ்க்கைக்கு அமைந்த மனைவியோடும் மூழ்கி, அவ்வுறுதி மொழி யைச் சொல்லுதலே முறைமையாம் என்று கூறினார்கள்.

குறிப்புரை: திரு - ஞானச் செல்வம். 'உறுவது நீற்றின் செல்வமும், பெறுவது சிவன் பால் அன்புமாகக் கொண்டவர்களாதலின்,இத்திரு அத்தகைய ஞானச் செல்வத்தைக் குறித்ததாம்.
இச் சிவயோகியார் தந்த ஓட்டைத் திரும்ப நீர் கொடுக்கும் வாய்ப்பு அமையாத பொழுது அவர் கூறுமாறு செய்வதே அறம், அதுவே அவருக்குத் தெளிவுதரும் ஆதலின், 'மூழ்குதல் வழக்கே' என்றார். வழக்கு - அறம்: முறைமை. தாம் - அசைநிலை.

Go to top
அருந்தவத் தொண்டர் தாமும்
அந்தணர் மொழியக் கேட்டுத்
திருந்திய மனைவி யாரைத்
தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையான் மூழ்கித்
தருகின்றேன் போது மென்று
பெருந்தவ முனிவ ரோடும்
பெயர்ந்துதம் மனையைச் சார்ந்தார்.

[ 36]


அரிய தவத்தினையுடைய திருநீலகண்டரும் அவையத்தார் இவ்வாறு கூறக்கேட்டு, மனையறத்தில் வழுவாத தம் மனைவியாரைத் தீண்டாமல் இருத்தற்குரிய காரணத்தை அவ்விடத் துச் சொல்லாதவராய்ப் பொருந்திய வகையில் நீரில் மூழ்கி உறுதி கூறுகின்றேன்; என்னுடன் வருவீராக என்று கூறி, பெரிய தவத்தை யுடைய சிவயோகியாரோடு தாமும் அவ்விடத்தினின்றும் பெயர்ந்து வீட்டை அடைந்தார்.

குறிப்புரை: தம் மனைவியாரிடத்துத் திருநீலகண்டத்தின்மேல் ஆணை கூறிச் செப்பிய மொழியை, அயலறியாது காத்து வாழ்ந்தவ ராதலால், மனையாளொடு மூழ்கித் தரும் பொழுதும் அவரைத் தீண்ட இயலாமையை அந்தணர்களிடம் செப்ப மாட்டாதவராய் இருத்தலின்,
'பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன்' என்றார். தாம் - அசைநிலை.

மனைவியார் தம்மைக் கொண்டு
மறைச்சிவ யோகி யார்முன்
சினவிடைப் பாகர் மேவுந்
திருப்புலீச் சுரத்து முன்னர்
நனைமலர்ச் சோலை வாவி
நண்ணித்தம் உண்மை காப்பார்
புனைமணி வேணுத் தண்டின்
இருதலை பிடித்துப் புக்கார்.

[ 37]


தம்மனைவியாரை அழைத்துக் கொண்டு மறை யவர் வேடங்கொண்டு நிற்கும் சிவபெருமானாகிய சிவயோகியார் முன்பு, சினம் மிக்க ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டிருக்கும் சிவ பெருமான் வீற்றிருந்து அருளும் திருப்புலீச்சரம் எனும் திருக் கோயிலின் முன்னுள்ள அரும்புகளும் மலர்களும் உடைத்தாகிய சோலை சூழ்ந்த அத்திருக்குளத்திற்கு அண்மையில் வந்து, தம் மனைவியாரைத் தீண்டாதிருக்கும் உண்மையை அங்கும் காப்பாராய், மணிகள் இழைத்த மூங்கில் தண்டின் இருபுறத்தையும் தாமும் மனைவியாருமாகப் பிடித்துக் கொண்டு திருக்குளத்தில் இறங்கினார்கள்.

குறிப்புரை: திருப்புலீச்சரம் - புலிக்கால் முனிவரராகிய வியாக் கிரபாதர், சிவலிங்கத் திருமேனியை எழுந்தருளுவித்து வழிபட்ட இடம் ஆதலின் இப்பெயர் பெற்றது. இது கூத்தப் பெருமான் திருக் கோயிலின் மேல்பால் சிறிது தொலைவில் உள்ளது. கணம் புல்ல நாயனார் தம் முடியினையே விளக்காக எரித்துப் பேறுபெற்ற இடம் இதுவாகும்.
திருநீலகண்டர் இத்திருக்கோயிலுக்கு அண்மையிலுள்ள திருக்குளத்தில் மூழ்கி இளமை அடைந்ததனால், இதனை 'இளமை யாக்கினார் கோயில்' என வழங்கி வரும் மரபு உளதாயிற்று. சின விடை - இனம் பற்றி வந்த அடைமொழி. நனை - அரும்பு. வேணு - மூங்கில்.

தண்டிரு தலையும் பற்றிப்
புகுமவர் தம்மை நோக்கி
வெண்டிரு நீற்று முண்ட
வேதியர் மாதைத் தீண்டிக்
கொண்டுடன் மூழ்கீ ரென்னக்
கூடாமை பாரோர் கேட்கப்
பண்டுதஞ் செய்கை சொல்லி
மூழ்கினார் பழுதி லாதார்.

[ 38]


இவ்வாறு மூங்கில் தண்டின் இருபுறத்திலுமாகப் பிடித்துக் கொண்டு, திருக்குளத்தில் மூழ்கப் புகும் அத் திருநீல கண்டரைப் பார்த்து, வெண்மையான திருநீற்றை முக்கீற்று வடிவில் அணிந்திருக்கும் சிவயோகியார், 'உம் மனையாள் கையைப் பிடித்து மூழ்குவீர்'என்று சொல்ல, குற்றமற்ற திருநீலகண்டரும் தாம் தம் மனைவியாரைத் தீண்டி மூழ்க இயலாதிருக்கும் சூழலை யாவரும் கேட்குமாறு, முன்னாளில் நிகழ்ந்த தம் சூளுறவைச் சொல்லித் திருக்குளத்தில் மூழ்குவாராயினர்.

குறிப்புரை: திருநீலகண்டர் செய்த சூளுறவு இளமைக் காலத்தில் ஆகும். அதற்குப்பின் பல ஆண்டுகள் செல்ல அவர்தம் முதுமைக் காலத்தில் நிகழ்ந்தது இவ்வருஞ்செயலாகும்.
ஆதலின் ஈண்டுப் பண்டு என்றது, ஏறத்தாழ 20 அல்லது 25 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்திருக்கலாம் என்பதை உய்த்துணரலாம். இக்கால எல்லையை முன்னுள்ள 368ஆவது பாடல் கொண்டும் அறியலாம்.

வாவியின் மூழ்கி ஏறுங்
கணவரும் மனைவி யாரும்
மேவிய மூப்பு நீங்கி
விருப்புறும் இளமை பெற்றுத்
தேவரும் முனிவர் தாமுஞ்
சிறப்பொடு பொழியுந் தெய்வப்
பூவின்மா மழையின் மீள
மூழ்குவார் போன்று தோன்ற.

[ 39]


திருக்குளத்தின் மூழ்கிக் கரையேறும் திருநீலகண்ட நாயனாரும், அவருடைய மனைவியாரும் தாம் அடைந்த மூப்புப் பருவம் நீங்கி, யாவரும் விரும்பத்தக்க இளமைப் பருவத்தை அடைந்து, தேவர்களும், முனிவர்களும் போற்றிப் பொழிந்த தெய்வ மணம் மிக்க மலர் மழையில் மீண்டும் முழுகுகின்றவர்களைப் போலப் பொலிவடைந்து தோன்ற.

குறிப்புரை: விருப்புறும் இளமை - யாவரும் விரும்பத்தக்க இளமை. பிற உயிர்களிடத்து இவ்விளமை செல்லின் ஒரு கால எல்லையில், தன் தன்மை கெடுதலின், அவ்வுயிர்களை விடுத்து, இவர்களிடத்து விருப்புற்றுப் பொருந்திய இளமை என்பார். 'விருப்புறும் இளமை' என்றார் என்றலும் ஒன்று. தாம் - அசைநிலை.

அந்நிலை யவரைக் காணும்
அதிசயங் கண்டா ரெல்லாம்
முன்னிலை நின்ற வேத
முதல்வரைக் கண்டா ரில்லை
இந்நிலை இருந்த வண்ணம்
என்னென மருண்டு நின்றார்
துன்னிய விசும்பி னூடு
துணையுடன் விடைமேற் கண்டார்.

[ 40]


வியக்கத் தக்க இளமைப் பருவம் அடைந்த அவ் விருவரையும் கண்டவர்கள் யாவரும் இது காறும் தமக்கு முன்னிருந்த மறைமுதல்வராகிய சிவயோகியாரைக் காணவில்லை. இவ்வாறு நிகழ்ந்த வண்ணந்தான் யாது? என்று ஐயுற்று நின்ற திருநீலகண்ட நாயனாரும் மனைவியாரும், யாண்டும் பரந்து நிற்கும் விண்ணிடத்து விடையின் மீது உமையொரு கூறனாய் எழுந்தருளி இருப்பதைக் கண்டார்கள்.

குறிப்புரை: சிவயோகியாரைக் காணாதாரெல்லாம் விடையின் மேல் உமையொரு பாகனாய் வந்திருப்பாரைக் கண்டாரில்லை. ஆனால், நாயனாரும், அவர் தம் மனைவியாரும் மட்டுமே விடை யின் மேல் எழுந்தருளினாரைக் கண்டனர்.
காரணம் இவர்களை ஆட்கொள்வதே இறைவன் திருவுள்ள மாதலின். கண்டவர்கள் தொழுதும் போற்றியும் நின்றனர்.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

Go to top
கண்டனர் கைக ளாரத்
தொழுதனர் கலந்த காதல்
அண்டரும் ஏத்தி னார்கள்
அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி
விடையின்மேல் வருவார் தம்மைத்
தொண்டரும் மனைவி யாருந்
தொழுதுடன் போற்றி நின்றார்.

[ 41]


அவ்வாறு எழுந்தருளியதைக் கண்ட திருநீலகண்ட நாயனார், தம் கைகள் கூப்பி வணங்கினார். அவர்தம் வியத்தகு பெருமையைக் கண்ட சிவபெருமானிடத்து ஒருப்பட்ட பத்திமை உணர்வுடைய தேவர்களும் போற்றிப் புகழ்ந்தார்கள். விண்ணிடத்துக் காணப்படும் திருக்கோலப் பொலிவைத் தமக்குக் காட்டியருளி, ஆனேற்றினை ஊர்தியாகக் கொண்டு எழுந்தருளும் சிவபெருமானைத் திருநீலகண்ட நாயனாரும் அவர்தம் மனைவியா ரும் ஒருங்கு வணங்கிப் போற்றி நின்றார்கள்.

குறிப்புரை: அன்பர்தம் பெருமை நோக்கிக் கலந்த காதல் அண்டரும் ஏத்தினார்கள் எனக் கூட்டுக. கலந்த காதல் - சிவபெருமானிடத்துக் கொண்ட ஒருமைப்பட்ட பத்திமை.

மன்றுளே திருக்கூத் தாடி
அடியவர் மனைகள் தோறுஞ்
சென்றவர் நிலைமை காட்டுந்
தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனான் மிக்கீர்
விருப்புட னிருக்க நம்பால்
என்றுமிவ் விளமை நீங்கா
தென்றெழுந் தருளி னாரே.

[ 42]


திருஅம்பலத்தின்கண் ஆனந்தக் கூத்தாடி, அடியவர்களின் இல்லங்கள் தோறும் எழுந்தருளிய பெருவீரரும், தேவர்கட்குத் தலைவரும் ஆன சிவபெருமானும், 'ஐவகை நுகர்ச்சிகளையும் வென்றதனால் சிறப்படைந்தவர்களே! நம்மிடத்து அன்போடு நீங்கள் இருவரும் எந்நாளும் இவ்விளமை நீங்காமல் இருந்து வாழ்வீர்களாக' என்று அருளி மறைந்தருளினார்.

குறிப்புரை: 'கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம் புலனும் ஓண்டொடி கண்ணேயுள' (குறள், 1101) என்பர் திருவள் ளுவர். அவ் வைம்புல நுகர்வையும் அறத்துறந்து நின்ற பெரியவராகத் திருநீலகண்டரும் அவர் துணையாரும் விளங்குதலின் 'வென்ற ஐம்புலனால் மீக்கீர்' என்றார்.

விறலுடைத் தொண்ட னாரும்
வெண்ணகைச் செவ்வாய் மென்றோள்
அறலியற் கூந்த லாராம்
மனைவியும் அருளின் ஆர்ந்த
திறலுடைச் செய்கை செய்து
சிவலோக மதனை யெய்திப்
பெறலரு மிளமை பெற்றுப்
பேரின்பம் உற்றா ரன்றே.

[ 43]


'உரன் என்னும் தோட்டியான்' (குறள், 24) ஓரைந்தும் காத்த பெருவலிமை உடைய திருநீலகண்ட நாயனாரும் , வெண்மையான பற்களையும், சிவந்த வாயையும், மென்மையான தோளையும், கருமணல் போன்ற கூந்தலையும் உடையவராகிய அவர் மனைவியாரும், சிவபெருமானின் திருவருளினால் யாவரும் செய் தற்கரிய செய்கையைச் செய்து யாவரும் பெறற்கரிய இளமையைப் பெற்றுச் சிவலோகத்தை அடைந்து பேரின்பத்தைப் பெற்றார்கள்.
குறிப்புரை: விறல் - வலிமை: உரன் என்றும் தோட்டியான் ஓரைந்தும் காத்தொழுகிய வலிமையும், இறைவன்பாலும், அடியவர் பாலும் கொண்டிருந்த பத்திமை வலிமையும் ஆம். ஆணை கூறி வாழ்ந்த இளமைக் காலத்தும், அதன் பின்னரும் புலனடக்கத்தில் வெற்றி கொண்டமைக்குக் காரணம், இருவரும் திருவருள் திறத்தில் ஆழ்ந்திருந்தமையேயாம் என்பார். 'அருளின் ஆர்ந்த திறலுடைச் செய்கை' என்றார். இளமை என்பது எவ்வுயிர்களும் ஒரு காலத்தில் பெறத் தக்கதே எனினும், இவ்விருவரும் பெற்ற இளமை என்றும் நீங்காமல் நிலைபெற்று இருத்தற்குரியதாதலின் 'பெறலரும் இளமை' என்றார். அன்று, ஏ என்பன அசைநிலைகள்.

அயலறி யாத வண்ணம்
அண்ணலா ராணை யுய்த்த
மயலில்சீர்த் தொண்ட னாரை
யானறி வகையால் வாழ்த்திப்
புயல்வளர் மாட நீடும்
பூம்புகார் வணிகர் பொய்யில்
செயலியற் பகையார் செய்த
திருத்தொண்டு செப்ப லுற்றேன்.

[ 44]


அயலில் உள்ளார் அறியாதவாறு சிவ பெருமானின் திருநீலகண்டத் திருவாணையைப் பாதுகாத்த மயக்க மற்ற சிறப்பினையுடைய திருநீலகண்ட நாயனாரை யான் அறிந்தவாறு போற்றி, மேகங்கள் வளர்கின்ற மாளிகைகள் மிக்க பொலிவினை உடைத்தாகிய காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலமரபில் தோன்றிய மெய்ம்மையான பத்திமையுடைய இயற்பகை நாயனார் செய்த திருத்தொண்டைச் சொல்லத் தொடங்குகின்றேன்.
குறிப்புரை: உய்த்தல் - கொண்டு செலுத்துதல். மயல் - மயக்கம்: இன்ப நுகர்ச்சிகளாய மயக்கம். புயல் - மேகம்.


Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song